காலத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் (UK Lockdown - Day 14)

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2 பேதுரு 3 : 9 ). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, இந்து மக்கள் ஆராதிக்கிற கிருஷ்ணன் கொடியவனாகிய நரகாசுரனை   அழிப்பதட்க்காக பரலோகத்தில் இருந்து மனித அவதாரம் எடுத்து இந்த பூலோகத்துக்கு வந்து அவனை அழித்தார் என்று நான் சிறு பையனாக இருந்த போது இந்து சமய புஸ்தகத்தில் படித்தேன், இந்து சமய புராதன நூல்களும் அவற்றையே கூறுகின்றன. 

ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இற்றைக்கு 2000 ம் ஆண்டுகளுக்கு முன் பரலோகத்தில் அவருக்கு இருந்த அத்தனை மகிமைகளையும் விட்டு விட்டு இந்த பூலோகத்துக்கு வந்தது யாரையும் அழிப்பதுக்காக அல்ல, மாறாக மனித குலத்தை அவர்களுடைய  பாவத்திலிருந்து மீட்கவே. அல்லேலூயா ! ஆண்டவர் பாவத்தை வெறுக்கிறார் ஆனால் பாவிகளை அவர் நேசிக்கிறார். அல்லேலூயா ! 

அவர் (இயேசு கிறிஸ்து) மீண்டும் இந்த பூலோகத்துக்கு வரப்போகிறார், அவருடைய வருகையின் நாள் வரைக்கும் உள்ள இந்த காலம் “கிருபையின் காலம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த கிருபையின் காலத்தில் ஆண்டவர் நம் ஒவ்வொருவர் மேலும் கிருபை நிறைந்தவராகவும், நீடிய பொறுமையுள்ளவராகவும் இருக்கிறார்.  

கர்த்தருடைய வருகையின் நாளோ “நியாயத் தீர்ப்பின் காலம்”. இக்காலத்தில் கர்த்தர் நீதியும், நியாயமுள்ளவராகவும், மனுஷரை நீதியாய் நியாயம் விசாரிக்கிறவராகவும் இருக்கிறார். 

பிரியமானவர்களே, கர்த்தரை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு அவருடைய நியமங்களைக் கைக் கொண்டு, அவருடைய சித்தத்தை செய்து கொண்டிருக்கின்ற உங்களுக்கு ஒருவேளை அவருடைய வருகை தாமதிப்பது போல் தோன்றினாலும், உலகத்தில் வாழுகின்ற எல்லா ஜனங்களும் கெட்டுப்போகாமல் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பியே அவர் எல்லார் மேலும் நீடிய பொறுமையுள்ளவராக இந்நாட்களில் தேவன் இருக்கிறார் என்று வேத வசனம் நமக்கு கற்றுத் தருகின்றது. அல்லேலூயா ! 

இதை வாசித்துக் கொண்டிருக்கிற, நீங்கள் ஒருவேளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக் கொள்ளாது இருப்பீர்களானால், இந்த கிருபையின் காலத்தை நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய ஆபத்தான இந்த நாட்களில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை உங்களுடைய ஆண்டவராக ஏற்றுக் கொண்டு பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்புங்கள். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, அவ்வாறு  நீங்கள் மனந்திரும்பாத பட்ச்சத்தில் கர்த்தர் வேறு ஒரு வாய்ப்பை உங்களுக்கு ஆயத்தப்படுத்தி கொடுக்க போவதில்லை. ஆகவே பிரியமானவர்களே, காலத்தை நழுவ விடாமல், காலத்தை பிரயோஜனப் படுத்தி கொள்ளுங்கள். 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். 



Comments