ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது (ஆதி 22:14). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.ஒரு நாள் தேவன் ஆபிரகாமிடம் உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு’ (ஆதி 22:2) என்று சொன்னபோது ஆபிரகாம் உடனடியாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் (ஆதி 22 :3) தேவன் அவனுக்கு கூறின இடத்துக்குச் சென்றடைய மூன்று நாட்களாயின, அந்த மூன்று நாட்களில் ஆபிரகாம் தன் மனதை மாற்றிக் கொள்ள நீண்ட அவசாகமிருந்தது, ஆனாலும் அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தேவன் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவனாக இருந்தான்.(ஆதி 22:4). வழியில் ஈசாக்கு தன் தகப்பனிடம் இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று கேடட போது, ஆபிரகாம் என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் (ஆதி 22:7-8) என்று விசுவாச வார்த்தைகளை பேசினார்.தேவன் குறித்த இடத்திற்கு அவர் வந்து அந்த பலிபீடத்தில் ஈசாக்கைக் கட்டி, அவனை வெட்டுவதற்கு கையை ஓங்கும்போது, கர்த்தருடைய தூதனானவர் அவனை தடுத்து நிறுத்தி, ‘பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார் (ஆதி 22 :9-12) ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான் (ஆதி 22 : 13).அதனால் ஆபிரகாம் அந்த இடத்துக்கு ‘யேகோவாயீரே’ என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. அல்லேலூயா! ஆபிரகாம் வருவதற்கு முன்பாகவே ஒரு ஆட்டுக்கடாவை அந்த இடத்தில் பலிக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருந்த எங்கள் தேவன் எத்தனை பெரியவர், ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து பயப்பட்டு கலங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.தேவனுக்கு ‘யெகோவாயீரே’ என்ற பெயர் உண்டு, அவருடைய பர்வதத்தில் எல்லாம் பார்த்துக்கொள்ளப்படும். ஆகவே தேவன் மீது உங்கள் விசுவாசத்தை வைத்து, எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் தேவனிடம் உங்களுடைய எதிகாலங்களை, உங்களுடைய எதிர்பார்ப்புக்களை அர்பணியுங்கள், அவருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் அவருடைய நேரத்தில் பார்த்துக் கொள்ளப்படும்.ஆமென். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen v
ReplyDelete