அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன் (2தீமோ1:11). அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் (2தீமோ1:12 ). கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். இந்த பிரபஞ்சத்தில் அநேக நல்லவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உலகப்பிரகாரமான காரியங்களுக்காக பாடுகளை அனுபவிக்கிறார்கள், அவர்கள் பாடுகள் அனுபவிப்பதட்காக வெட்கப்படுவதில்லை.ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுல் தான் கிறிஸ்துவின் நிமித்தமாய் பாடுகளை அனுபவிப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுகிறார், காரணம் தான் விசுவாசிக்கிறவர், ஆராதிக்கிறவர் யார் என்று அவர் நன்கு அறிந்திருந்தபடியால் அவருடைய பாடுகளின் மத்தியிலும் அவர் சந்தோஷசமாய் இருந்தார்.வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிக்கிறது, பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் தான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளும்படி ஜனங்கள் எல்லாருக்கும் கடடளையிடடதோடு , எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால் அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றும் அறிக்கையிடடான் ( தானி 3:1-6). எல்லா மனுஷரும் அவனுக்கு பயந்து தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள், ஏனென்றால் அவன் பல ராஜ்யங்களை ஜெயித்த ராஜா.ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற வாலிபர்கள் அவனுக்கு பயப்படாமல், "நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்" என்றார்கள் (தானி. 3:16,17). காரணம் நேபுகாத்நேச்சாரைப் பார்க்கிலும், அவன் நிறுத்தின பொற்சிலையைப் பார்க்கிலும் தாங்கள் ஆராதிக்கின்ற , விசுவாசிக்கிற தங்களுடைய கர்த்தர் வல்லமையுள்ளவர், பெரியவர் என்பதையும், அவர்கள் தங்கியிருந்த பாபிலோன் சாம்ராஜ்யத்தைக் காட்டிலும், பரலோக சாம்ராஜ்யம் மிகவும் வல்லமையுள்ளது என்பதையும் அந்த மூன்று எபிரேய வாலிபர்கள் நன்கு அறிந்திருந்தபடியால் அவனது பொற்சிலையைப் பணிய மறுத்தார்கள். இதனால் அவனது கோபம் அதிகமாகி, சூளையை ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கும் படி கடடளையிட்டு அந்த மூன்று எபிரேய வாலிபர்களையும் அக்கினி சூளையில் தூக்கி எறிந்தான்.ஆனால் கர்த்தரோ, அக்கினியின் உக்கிரத்தை நீக்கி, தம்முடைய மூன்று பிள்ளைகளோடு அக்கினிச்சூளையிலே உலாவி, அவர்களைத் தப்புவித்தார்.அல்லேலூயா ! தேவனால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. எப்படிப்பட்ட பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, கர்த்தர் பெரியவராயிருந்து அவற்றிலிருந்து உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக , உண்மையுள்ளவராக இருக்கிறார். எந்த டாக்டராலும் குணமாக்க முடியாத வியாதியையும் குணமாக்க அவர் வல்லவராக இருக்கிறார், உங்களது ஆயுசை நீடித்து தர அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா. இன்று இந்த பூலோக ஜனங்கள் அவரையும், அவரது வல்லமையையும் குறித்து அறியாது இருக்கிறார்கள், அவர் தான் உங்களுடைய பாவங்களுக்காய், உங்களுடைய அக்கிரமங்களுக்காய், உங்களுடைய மீறுதலுக்காய் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இயேசு கிறிஸ்து. நீங்கள் அவரை உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளாது இருப்பீர்களானால் இப்போதே உங்களுடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணியுங்கள். ஆமென் ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment