நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று. நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்து போயிற்று. நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன் (சங் 77 :1-4). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள நான்கு வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சிலர் வாழ்க்கையில் அவர்கள் எதிர்நோக்கும் கவலைகளை மறைப்பதுக்கு மதுபானத்தை குடிக்கிறார்கள், சிலர் புகைப் பிடிப்பார்கள், வேறு சிலரோ வாய் விட்டு சிரித்தால் துக்கம் நீங்கிப்போகும், வியாதி நீங்கிப் போகும் என்கிறார்கள். ஆனால் இவைகளெல்லாம் உங்களுடைய கவலைகளுக்கு, துக்கங்களுக்கு, வேதனைகளுக்கு, சஞ்சலங்களுக்கு மருந்தல்ல. இந்த சங்கீதத்தைப் பாடிய சங்கீதக்காரனுடைய இருதயம், வாழ்க்கையில் அவர் கடந்து சென்ற சூழ்நிலையில் நிமித்தம் கவலையினாலும், துக்கத்தினாலும், சஞ்சலத்தினாலும் நிரம்பி, அவர் மனம் தளர்ந்து சோர்ந்து போய் இருந்த போது அவர் தேவனை நோக்கி ‘ என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன் ‘ என்று கதறி அழுகிறார். ஆம் பிரியமானவர்களே வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் பாடுகள், உபத்திரவங்கள் நிமித்தம் உங்களுடைய இருதயம் வேதனையினாலும், துக்கத்தினாலும், கவலையினாலும் நிரம்பி, என்ன வாழ்க்கை இது என்று சலித்துப் போய், வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையற்ற நிலையில் மனம் சோர்ந்து, தளர்ந்து போய், மனம் அழுத்தப்படட (despair/stress/depression) நிலையில் இருக்கிறீங்களா? சங்கீதக்காரனைப் போல் உங்களுடைய கவலைகளை, பாரங்களை தேவ சமூகத்தில் இறக்கி விடுங்கள், தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார். உங்களை உங்கள் பிரச்சனையிலிருந்து விலக்கிப் பாதுகாப்பார், உங்கள் கவலைகளை, துக்கங்களை நீக்கிப்போடுவார். அல்லேலூயா ! வேதம் சொல்லுகிறது, கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார் (சங் 55:22). வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேது 5:7)என்று. தேவன் இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள், அவர் ஒரு போதும் உங்களை கை விடவும் மாட்டார், உங்களை வெட்கப்பட்டு போகவும் விட மாட்டார். அவர் உங்களை நேசிக்கிறார், அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment