நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் (எரேமி 31:25). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, பாபிலோனியரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோன் தேசத்தில் சிறையிலிருந்த யூத ஜனங்கள் அவர்களுக்கு நேரிடட சூழ்நிலையின் நிமித்தம் விடாய்த்துப்போன ஆத்துமாக்களாகவும், தொய்ந்து போன ஆத்துமாக்களாகவும் இருக்கிறார்கள். விடாய்த்த ஆத்துமா மற்றும் தொய்ந்த ஆத்துமா என்றால் நேரிடட பாதகமான சூழ்நிலையின் நிமித்தம் எல்லாவற்றையும் இழந்து சோர்ந்து போய் எதிர்கால நம்பிக்கையற்று வெறுமையாய் இருக்கும் ஆத்துமா என்று பொருள். அவ்வாறு சோர்ந்து போய் நம்பிக்கையற்று இருக்கும் யூத ஜனங்களுக்கு கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசியான எரேமியா மூலம் சொல்லுகிறார்.’ நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் ‘ என்று. அல்லேலூயா ! சம்பூரணம், நிரப்புதல் என்பது வெறுமையாய், நம்பிக்கையற்று இருக்கும் அவர்களது வாழ்க்கையை பூலோக ஆசிர்வாதத்தினாலும், ஆவிக்குரிய ஆசிர்வாதத்தினாலும் நிரப்பி, ஆசிர்வதித்து அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு திருப்தியை கொடுப்பதைக் குறிக்கின்றது. ஆகவே அவர்கள் எரேமியா தீர்க்கதரிசி மூலம் கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தையைக் கேட்ட போது, அவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தை எதிர்கால நம்பிக்கையையும், ஆறுதலையும், உட்ச்சாகத்தையும், கொடுத்தது. அல்லேலூயா ! நீங்களும் உங்களுக்கு நேரிட்ட சூழ்நிலையின் நிமித்தம் சோர்ந்து போய், எதிர்கால நிச்சயத்தை இழந்து வாழ்க்கையில் வெறுமையாய் இருக்கிறீங்களா? கவலைப்பட வேண்டாம். விடாய்த்து, தொய்ந்து போய் இருக்கும் உங்கள் ஆத்துமாவை கர்த்தர் பூலோக ஆசிர்வாதங்களினாலும், ஆவிக்குரிய ஆசிர்வாதங்களினாலும் நிரப்பி சம்பூரணமடையப் பண்ணுவார். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அவர் உங்களுடைய சூழ்நிலையை மாற்ற வல்லமையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment