நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய் (சங் 37:34). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த வசனத்தில் நீதிமான், துன்மார்க்கன் என இரண்டு விதமான ஜனங்களைக் குறித்து பேசியிருப்பதோடு அவர்களுடைய வாழ்க்கை முடிவுகளைப் பற்றியும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் நமக்குச் சொல்லியிருக்கிறார். நீதிமானைக் குறித்துப் பேசும் போது அவர் சொல்லுகிறார், நீதிமான் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவதுக்கு கர்த்தர் அவனை வாழ்க்கையில் உயர்த்துவார் என்றும், துன்மார்க்கன் அழிந்து போவான் என்றும் அவர்களுடைய வாழ்க்கை முடிவுகளை தெளிவாய் நமக்கு போதித்து இருக்கிறார். ஆனால் நீதிமான் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் படி கர்த்தர் அவனை அவன் வாழ்க்கையில் உயர்த்த வேண்டுமானால் அவன் இரண்டு காரியங்களை கடைப்பிடிக்கும் படி வேதம் அவனுக்கு ஆலோசனை கூறுகின்றது. முதலாவது அவன் கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும், இரண்டாவது அவன் கர்த்தருடைய வழியைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் வேதம் அவனுக்கு கூறுகின்றது. பிரியனானவர்களே, சங்கீதம் 40:1 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது ‘ கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் ‘ என்று, கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு உயர்ந்த திடடத்தை வைத்திருப்பதோடு, உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காரியங்களையும் நிறைவேற்றுவதற்கு ஒரு குறித்த காலத்தையும் அவர் நியமித்திருக்கிறார். ஆகவே அது வரைக்கும் நீங்கள் தேவ சமூகத்தில் பொறுமையோடு காத்திருந்து அவருடைய வழியைக் கைக்கொள்ள வேண்டும். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Comments
Post a Comment