ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் (யோவே 2:12-13)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவங்கள் செய்து அவரை விட்டு விலகி தூரமாய் இருந்த போது, கர்த்தர் யோவேல் தீர்க்கதரிசி மூலம் யூதா ஜனங்களோடு “நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள், நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் என்று கூறினார்.
பிரியமானவர்களே, நம்முடைய பாவங்களுக்காக நாம் வருத்தப்படுகிறோம் என்பதுக்கு இரட்டை உடுத்திக் கொள்ளுதலும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் வெளிப்படையான அடையாளங்களாக இருக்கின்றன, ஆனால் நாம் செய்த பாவங்களுக்காக நம்முடைய உள்ளத்தில் வருத்தம் இருக்க வேண்டும், உள்ளத்தில் வருத்தமில்லாமல் வெளியிலே அழுவதும், புலம்புவதும், உபவாசமிருப்பதும் மாயமாலமாயிருக்கும், உள்ளான மனுஷன் புதுப்பிக்கப்படாமல் வெளியான மனுஷன் வேஷம் போடுவதில் எந்த பிரயோஜனமுமில்லை. வஸ்திரம் கிழிந்தால், அனேகர் கண்ணுக்குத் தெரியும்! இருதயம் கிழிவது யாருக்குத் தெரியும்?
கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் தாவீதுக்கு அவன் செய்த பாவத்தை வெளிப்படுத்திய போது, அவன் உள்ளம் வருந்தி, தான் செய்த பாவத்துக்காக மனங் கசந்து, அழுது கர்த்தருடைய சமூகத்தில் மெய்யாகவே மனந் திரும்பினான், அவ்வாறு அவன் மெய்யாகவே மனந்திரும்பிய போது கர்த்தர் அவனுடைய பாவத்தை மன்னித்தார். அல்லேலூயா ! மற்றும் நினிவே ஜனங்கள் தங்களுடைய பாவங்களுக்காக இருதயங்களைக்கிழித்து, மெய்யாகவே கர்த்தர் இடத்தில் திரும்பின போது, வேதம் சொல்லுகிறது, தேவன் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார் (யோனா 3:10) என்று அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, நாமும் நம்முடைய இந்த ஆபத்தான நாட்களில் கர்த்தருடைய சமூகத்தில் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, அறிவிக்கை செய்யப்படாத ஏதாவது பாவங்கள் நம்முடைய இருதயத்தில் இருக்குமானால், கால தாமதம் பண்ணாமல் இப்போதே நம்முடைய பாவங்களுக்காக கர்த்தருடைய சமூகத்தில் பாவ அறிக்கை செய்து, கர்த்தர் இயேசுவை நம்முடைய ஆண்டவராக ஏற்றுக்கொண்டு மனந்திரும்பும் போது, கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவராகவும், இருக்கிற படியால் அவர் எங்களுடைய பாவங்களையும் மன்னித்து, எங்களை அவர் கொரோன வைரஸ் இல் இருந்தும், மற்றும் நமக்கு நேரிட இருக்கும் எல்லா அழிவிலிருந்தும் விலக்கிப் பாது காத்துக் கொள்ள அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment