யோபு : நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது

நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது (யோபு 3:25).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாகவும், இதை வாசிக்கிற உங்களுக்கும் பக்திவிருத்தி உண்டாகும் படியாகவும் தேவன் என்னையும், என் மனைவியையும் எவ்வாறு எங்களுடைய வாழ்க்கையில் இரட்சித்தார் என்பதை சுருக்கமாக சாட்சியாக கூற விரும்புகின்றேன். அதன் பிறகு மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, நான் இலங்கை தேசத்தில் கிழக்கு மாகாணமாகிய மட்டக்களப்பில் ஒரு அர்ப்பணிப்புள்ள இந்து குடும்ப பெற்றோருக்கு மகனாக பிறந்தேன், எனக்கு ஒரு மூத்த சகோதரனும், ஒரு இளைய சகோதரனும் இருக்கிறார்கள். எனது பெற்றோர் இந்து சமயத்தில் பக்தியும், வைராக்கியமும்  நிறைந்தவர்கள், குறிப்பாக எனது தாயார் இந்து சமய கொள்கைகளை தவறாது கடைப் பிடித்து வந்தவர். நான் மட்டக்களப்பில், 1814 ம் ஆண்டு  இங்கிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட வணக்கத்துக்குரிய வில்லியம் ஆல்டினால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது மிஷனரி பாடசாலையாகிய “மெதடிஸ்த மத்திய கல்லூரியில்” பாடம் கற்றேன்.  நான் என்னுடைய வாலிப  பருவத்தில் காளி இந்து கோவிலில் என்னுடைய தாயாரோடு சேர்ந்து தொடர்ச்சியாக 5 வருடங்கள் தீ மிதித்து, இந்து சமயத்தில் பற்றுள்ளவனாகவும், வைராக்யமுள்ளவனாகவும் இருந்தேன், வாலிப பருவத்தில் தேவன் இயேசு கிறிஸ்து என்னை தேடி வந்தும், அவரை நான் ஏற்றுக் கொள்ளாது  நிராகரித்திருந்தேன்.

என்னுடைய மனைவி இலங்கை தேசத்தில் கொழும்பு மாகாணத்தில் அர்ப்பணிப்புள்ள ஒரு buddhist குடும்ப பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார், நாங்கள் இரண்டு பேரும் பல போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு குடும்ப பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டோம்.

திருமணம் செய்து ஓர் இரு ஆண்டுகளில் இலங்கை தேசத்திலிருந்து இங்கிலாந்து தேசத்துக்கு student விசாவில் வந்தோம், இங்கிலாந்து தேசத்துக்கு வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய மூத்த சகோதரன் நிஷாந்தின் நண்பர் போதகர்  மெல்வின் அமுதாங்கன் மற்றும் அவரது மனைவி சகோதரி கிறிஸ்டின் மூலம் தேவன் அவருடைய  தேவாலயத்திற்குச் செல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். தேவனுக்கு மகிமை உண்டாவதாக, அந்த நாளில் நானும் என் மனைவியும் எடுத்த முடிவு எங்களுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறியது என்று கூறினால் அது மிகையாகாது, அதட்க்குப் பிறகு தேவன் எங்களுடைய வாழ்க்கையில்  அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்தார், அவற்றில் குறிப்பிடத்தக்கது, தேவன் என் மனைவியின் “Thiroxine“ வியாதியை எந்த மருந்து வகைகளையும் அவள் பாவிக்காமல் தேவன் தனது குணப்படுத்தும் கரத்தினால்  குணப்படுத்தினார். அல்லேலூயா !

2011 இல், நானும் என் மனைவியும் இயேசு கிறிஸ்துவை எங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டோம். தேவனுக்கு மகிமை உண்டாவதாக, அதன் பிறகு, தேவன் எங்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகளைக் கொடுத்து எங்களை  ஆசிர்வதித்ததோடு எங்களுடைய வாழ்க்கையில் இன்னும் அநேக அற்புதங்களைச் செய்து வருவதோடு, ஆபத்துக்காலங்களில் எங்களுக்கு அவர் அனுகூலமான துணையாகவும் இருந்து வருகிறார். அதுமாத்திரமல்ல இன்று தேவன் என்னையும்,என் குடும்பத்தையும் வல்லமையாக அவருடைய நாமம் மகிமைப்படும்படியாக பயன்படுத்தி வருகிறார், சிறு பருவத்தில் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்த என்னை கர்த்தர் இன்று தமிழில் மாத்திரமல்ல, ஆங்கிலத்திலும் அவருடைய வார்த்தையை பிரசங்கிக்கிற ஒரு ஊழியக்காரனாய் பயன்படுத்தி வருகிறார், அல்லேலூயா ! தேவன் எங்களை பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எங்களை இரட்சித்தத்துக்கு அடையாளமாகவும், அவருக்கு நன்றி செலுத்தும் வண்ணமாகவும் எங்களுடைய முதலாவது மகனுக்கு “Elisha “  (God is my salvation) என்று அர்த்தம் கொள்ளும் விதமாக பெயரிட்டத்தோடு, எங்களுடைய ஊழியத்துக்கும் “God is my  salvation ministry “ என்று பெயரிட்டிருக்கிறோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.

தேவ ஆவியானவரின் உதவியோடு எங்களுடைய வாழ்க்கையில் தேவன் எங்களை எவ்வாறு இரட்சித்தார் என்பதை விரிவாக ஒரு புத்தகமாக எழுத நான் நினைத்திருப்பதோடு, வேதத்தில் உள்ள 66  புத்தகங்களையும் வேதாகம விளக்கவுரையோடு புத்தகமாக எழுதவும் நினைத்திருக்கிறேன், ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய ஜெபத்தில் என்னையும், என்னுடைய குடும்பத்தையும், எங்களுடைய ஊழியங்களையும் தாங்கும் படி மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்ளுகிறேன்.

நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது (யோபு 3:25).

யோபுவைக் குறித்து வேதம், அவன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என்றும் அவன் ஒரு செல்வந்தன் என்றும்  கூறுகின்றது,

தேவன் பிசாசுக்கு அனுமதி கொடுத்ததன் நிமித்தம் அவன் தன்னுடைய வாழ்நாளில் ஒரே நாளில் தன்னுடைய ஏழு குமாரர்களையும், மூன்று குமாரத்திகளையும் இழந்ததோடு  அவனுடைய அணைத்து மிருக ஜீவன்களையும் இழந்து, வியாதிப்பட்டு இருந்த போது யோபு “ நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது” என்று கூறுகிறார்.

வேதம் சொல்லுகிறது யோபு தன்னுடைய தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை, அந்த  அளவு பரிசுத்தவானாய் வாழ்ந்தான். ஆனால்  அவன் தன்னுடைய இருதயத்தில் பயந்த காரியம் அவனுக்கு நேரிட்டது என்றும் ;  அவன் அஞ்சினது அவனுக்கு வந்ததாகவும் கூறுகிறான்.

பிரியமானவர்களே, பரிசுத்தவான்களின் தவறுகளை “ஒரு படிப்பினையாக” (lesson) தேவன் நமக்கு அவருடைய வார்த்தைகளை உள்ளடக்கிய வேத புஸ்தகத்தில் எழுதியிருப்பதாக வேதம் நமக்குக் கூறுகின்றது. யோபு எதட்க்காக பயந்தாரோ அது அவருக்கு நிகழ்ந்தது.

வேதம் சொல்லுகிறது “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” (நீதி 18:21) என்று.

சில கிறிஸ்தவர்கள் யோபுவைப் போல் பரிசுத்தவான்களாய் இருப்பார்கள், ஆனால் ஆனால், உள்ளத்தில் வீணான பயங்கள் இருக்கும், எதிர்மறையாக (negative) சிந்திப்பவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் எதிர்மறையாக பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். கொள்ளை நோய் தனக்கு வந்து விடுமோ, கேன்சர் வியாதி தனக்கு வந்து விடுமோ, இருதய வியாதி தனக்கு வந்து விடுமோ என்று உள்ளத்தில் பயந்து கொண்டிருப்பார்கள்,

இந்த பயம் தவறானது. நாம் இதை அனுமதிக்கக்கூடாது; இதை அனுமதித்தால் நம் இருதயத்தின் வாசலை நாம் பிசாசுக்கு திறந்து விடுகிறோம்; அப்படி திறந்து விட்டால் அவன் நாச, மோசங்களை உண்டாக்குவான் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

 நீங்கள் இந்த கொள்ளை நோயாகிய Coronavirus க்கு பயந்து கொண்டிருப்பீர்களானால் யோபுவைப்w போல், அவன் பயந்த காரியம் அவனுக்கு வந்தது போல் உங்களுக்கும் வந்து விடும்.

ஆகவே பிரியமானவர்களே, இன்றையிலிருந்து நம்முடைய வாழ்க்கையில்  நாம் எதிர்மறையாக சிந்திப்பதை, மற்றும் எதிர்மறையாக பேசுவதை நம்முடைய வாழ்க்கையில் இருந்து தவிர்த்து தேவனையும், அவருடைய வசனத்தையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் நம்புவோம், அல்லேலூயா !

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது (சங் 91:10) தேவனுடைய வாக்குத்தத்ததை நம்புங்கள்.

தேவன் இயேசு உங்களையும், உங்கள்  குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?