திராச்சை ரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல (நீதி 31 : 4). துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல்’ (எபே 5 :18 ).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். ராஜா என்பது தேசத்து தலைவரை , ஒரு பொறுப்பில் இருக்கும் மனிதரை குறிக்கின்றது. உதாரணத்துக்கு நீங்க நல்ல ஒரு வேலை செய்கிறவராக நீங்கள் அநேகருக்கு அதிகாரியாக இருப்பீர்கள் என்றால் , சிந்தித்து பாருங்கள் நீங்கள் மதுபானம் குடித்து மது மயக்கத்தில் இருந்தால் எப்படி உங்களுடைய கடமைகளை சரியாக செய்ய முடியும்? குடும்பத்துக்கு தலைவராக இருக்கும் நீங்க குடிப்பவர்களாக இருந்தால் எப்படி குடும்ப காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள்? உங்களுடைய பிள்ளைகள் உங்களை பார்த்து கொண்டிருக்கிறார்கள் , அவர்கள் பிழையான வழிகளில் சென்று விடுவார்கள். வேண்டாம் மது அருந்துவதை விட்டு விட்டு அவர்களுக்கு நீங்க நல்ல ஒரு தகப்பனாக , ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தலைவன் எப்படியோ அப்படி தான் சீஷனும் இருப்பான். மதுபானம் பண்ணுவது பாவம். மதுபானம் அருந்தினவர்கள் புத்தி மயக்கத்தில் இருப்பார்கள். அவர்களுக்குள் தெளிந்த சிந்தை இருக்காது அவர்களுடைய பேச்சில் தெளிவு இருக்காது , புத்தி மயக்கத்தினால் மதியீனமாய் நடப்பார்கள். தங்களுடைய கடமைகளை எளிதில் மறந்து விடுவார்கள். மதுபானத்தினால் நிறைந்து இருக்கிறவர்கள் புத்தி மயக்கத்தினால் தகாத காரியங்களை செய்வார்கள். பாவத்தில் விழுந்து விடுவார்கள். வேண்டாம் நிறுத்தி விடுங்கள். ஒரு சிலர் வேலை செய்து உடம்பு களைப்பாக இருக்கு ஒரு சிப் எடுத்தால் களைப்பு போய் விடும் என்பார்கள். களைப்பு ஆண்களாகிய உங்களுக்கு மாத்திரம் வருவது இல்லை , பெண்களுக்கும் வரும் , அவர்களும் வேலைக்கு போகிறார்கள் , வீட்டில் சமையல் வேலைகளை பார்க்கிறார்கள். அவர்களும் உடம்பு களைப்பு போக குடிக்கலாமே? வேண்டாம் இன்றைக்கே குடிப்பதை நிறுத்தி விடுங்கள். குடிப்பது உங்களுடைய சரீரத்தைப் பாதிக்கும். உங்களுடைய ஆயுசு நாட்கள் குறையும் வேண்டாம். தேவனை துக்கபடுத்தாதீங்க. வேத வசனத்துக்கு கீழ் படியுங்கள். கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Comments
Post a Comment