தேவனிடத்தில் பட்சபாதமில்லை (ரோமா 2::11) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் மனுஷர்களைப் போல் ஜாதி, இனம் , மதம், மொழி, ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று மனுஷர்களைப் பிரித்து பட்ச பாதம் பார்ப்பதில்லை. மனுஷர்கள் தான் தங்களுக்குள் இவ்வண்ணமாக ஜனங்களைப் பிரித்து, பிரிந்திருக்கிறார்கள் ஆனால் தேவனுடைய பார்வையில் எல்லாரும் கனம் பெற்றவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர் எல்லாரையும் ஒரே விதமாய், ஒரே அளவாய் நேசிக்கிறார். மனுஷர்கள் தான் தங்களுடைய பிள்ளைகளை வேறுபடுத்தி பார்ப்பதும் , ஒருவரை அதிகமாக நேசிப்பதும், ஒருவரை தாழ்த்திப் பேசுவதும், ஒருவரை உயர்த்திப் பேசுவதுமாய் இருக்கிறார்கள் ஆனால் தேவன் அவ்வாறு பார்ப்பதில்லை, அவர் எல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார், மனுக்குலத்தை அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்க்கும் படியாகத்த் தான் தேவன் கல்வாரி சிலுவையில் மரித்தார். இன்று தேவன் எல்லாருக்கும் சமமாக அவருடைய கிருபையை பொழிந்திருக்கிறார், ஆனால் அவர் கொடுத்த கிருபையை பயன்படுத்துவதும் , பயன்படுத்தாததும் மனுஷர்கள் கையில் தான் இருக்கின்றது. கொர்நேலியு தேவன் கொடுத்த கிருபையை பயன்படுத்திக் கொண்டார். அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன் (அப் 10 ). நியாயத் தீர்ப்பு நாளில் தேவன் நம்மை நியாயம் விசாரிக்கையில் நாம் எந்த ஜாதி , எந்த இனம் என்று கேட்கப்போவதில்லை , நாம் எப்படிப்படடவர்கள் என்று தான் ஆராய்ந்து பார்க்கப்போகிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment