தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் , அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28:13). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , இரண்டு காரியங்களை இந்த வசனத்தின் மூலமாய் நாம் கற்றுக் கொள்ளுகிறோம். முதலாவது, தன் பாவங்களை தேவனுக்கு மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். இரண்டாவது தன் பாவங்களை தேவனுக்கு அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் அவரது இரக்கத்தைப் பெறுகிறான். ஒரு நோயாளி மருத்துவரிடம் தன்னுடைய நோயை மறைக்காமல் எடுத்துச் சொன்னால் தான் , மருத்துவரினால் சரியான மருந்துகளைக் கொடுத்து அந்த வியாதிக்கு சிகிச்சை செய்ய முடியும். அதே போலத்தான் நீங்கள் உங்களுடைய பாவங்களை கர்த்தரிடம் அறிக்கை செய்யும் போது நீங்கள் அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுவதோடு , உங்களது வாழ்க்கை வாழ்வடைகின்றது, ஆசிர்வதிக்கப்படுகின்றது. வேதம் சொல்லுகிறது, நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவா 1:8-10). ஆகவே நாம் யாரையும் நியாயம் தீர்க்காமல் , நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து , பாவங்களை தேவ சமுகத்தில் அறிக்கை செய்து தேவனுடைய இரக்கத்தை தேடுவோமாக. அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment