கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும்

கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன. என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங் 6:1-3). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது ராஜா வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும், நெருக்கங்களுக்கூடாகவும், வேதனைகளுக்கூடாகவும் கடந்து சென்று கொண்டிருந்த போது அவருடைய சரீரம் பெலனற்றுப் போய் வியாதிப்பட்டிருந்ததோடு, அவருடைய ஆத்துமாவும் வியாகுலப்படுகிறது. அவரால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை, சரீரம் பெலவீனப்பட்டிருக்கிறது, அவருடைய எலும்புகள் நடுங்குகிறது, எலும்புகள். நடுங்கும் அளவுக்கு அவர் வயது சென்று முதிர்வயதிலும் இருக்கவில்லை, ஒரு நடுத்தர வயதில் தான் இருந்தார், ஆனால் பிரச்சனைகளும், பாடுகளும், வேதனைகளும் அவரை நெருக்கினதால், அவர் சரீரம் பலவீனம் அடைந்து, எலும்புகள் நடுங்குகின்றன. அது மாத்திரமல்ல அவருடைய ஆத்துமாவும் மிகவும் வியாகுலப்படுகிறதது. இந்த சூழ்நிலையில் தான் அவர் ‘கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன. என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்’ என்று சொல்லி தன்னுடைய கவலைகளை, வேதனைகளை, பாரங்களை தேவனுக்குத் தெரியப்படுத்துகிறார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, உங்களுடைய பாரத்தை இறக்கி வைக்க உங்களுக்கு ஒரு தேவன் உண்டு அவர்தான் உங்களை சிருஷ்டித்த உங்களுடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர் சொன்னார் ‘ வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28). என்று . உங்களுடைய கவலைகளை, பாரங்களை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்து விடுங்கள். அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். தாவீதுக்கு உதவி செய்த தேவன் நிச்சயமாக  உங்களுக்கும் உதவி செய்வார் , உங்களுடைய கவலைகளை, பாரங்களை அவர் நீக்கிப்  போடுவார். தாவீது இந்த 6 ம் சங்கீதத்தை முடிக்கும் போது இவ்வண்ணமாக முடிக்கிறார் ‘கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்’  (சங் 6:9-10) என்று. அல்லேலூயா ! தாவீது தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தேவனையே சார்ந்து வாழ்ந்ததோடு, தேவன் மீது அசைக்க முடியாத பலமுள்ள விசுவாசத்தையும் வைத்திருந்தார், அவர் தேவன் மீது வைத்திருந்த அவருடைய பலமுள்ள விசுவாசமே அவருக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொண்டு வந்தது, வேதம் சொல்லுகிறது, ‘ விசுவாசமில்லாமல் தேவனைப் பிரிய படுத்த முடியாதென்று (எபி 11:6). பிரியமானவர்களே, நீங்களும் தாவீது ராஜாவைப் போல் தேவனையே உங்களுடைய எல்லா சூழ்நிலையிலும் சார்ந்து, அவர் மீது விசுவாசம் வைத்து உங்களுடைய கவலைகளை, பாரங்களை தேவனுக்கு தெரியப்படுத்தும் போது (பிலி 4:6).  தாவீதை பிரச்சனையில் இருந்து விடுதலை செய்து அவரை வாழ்க்கையில் உயர்த்தின தேவன் உங்களையும் உங்களுடைய பிரச்சனையிலிருந்து விடுதலை செய்து உங்களையும் வாழ்க்கையில் உயர்த்த அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் !

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?