என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் (சங் 18:29). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த 18 வது சங்கீதத்தை எழுதியிருக்கிறார். தாவீது இஸ்ரவேல் தேசத்தை 40 வருடங்கள் ஆட்சி செய்தார்ர். அவர் வாழ்க்கையில் தேவனை உண்மையாக நேசித்தார். அவர் ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த போதும் அவர் கர்த்தரையே சார்ந்து வாழ்ந்தார், கர்த்தருடைய பெலத்தினாலே கோலியாத்தை யுத்தத்தில் ஜெயித்தார், அது மாத்திரமல்ல அவர் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த காலங்களிலும் கூட அவருக்கு அநேக யுத்த வீரர்கள், படைகள் இருந்த போதிலும், அவர் தனது சேனைகளின் பெலத்திலோ, அவருடைய  திறமையிலோ சார்ந்து வாழவில்லை, மாறாக அவர் தனது எல்லா சூழ்நிலைகளிலும் தேவனையே சார்ந்து, அவரையே நம்பி, அவருடைய பெலத்திலே வாழ்ந்தார், அவர் தான் ஆராதிக்கிற, விசுவாசிக்கிற தேவனைக் குறித்தும் , அவருடைய வல்லமையைக் குறித்தும் நன்கு அறிந்திருந்ததோடு, கர்த்தருடைய பெலத்தினால் அவரால் ஒரு சேனைக்குள் பாய்ந்து போக முடியும் என்றும், அவருடைய பெலத்தினால் அவரால் ஒரு மதிலை தாண்ட முடியும் என்றும் அறிந்திருந்தார். அதனால் தான் அவரால் சொல்ல முடிந்தது ‘ தேவனால் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்’ என்று. அல்லேலூயா ! பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய ஞானத்திலோ, உங்களுடைய அறிவிலோ, உங்களுடைய பெலத்திலோ, உங்களுடைய திறமையிலோ சார்ந்திருக்காமல் தாவீது ராஜாவைப் போல் கர்த்தருடைய பெலத்தை சார்ந்து வாழுங்கள், அவர் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை எல்லாம் முறியடித்து நீங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல உதவி செய்வார். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments