கர்த்தர் ஜீவனுள்ளவர் (UK eased more lockdown restrictions - Day 115)
கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக (சங் 18:46)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய பாதுகாப்பையும், பராமரிப்பையும், இரட்சிப்பையும் அதிகமாய் ருசித்துப் பார்த்திருந்ததினால் அவர் கர்த்தரை தன்னுடைய வாழ்க்கையில் நன்றியோடு துதித்து, ஆராதித்து கனப்படுத்தி, மகிமைபடுத்தினார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, புற ஜாதியின் தேவர்கள் “விக்கிரங்கள்”, அவைகள் மனிதனுடைய கை வேலைகள், அவைகள் மரித்த நிலைமையில் உள்ளன, அவைகளுக்கு காதுகள் இருந்தும் கேட்க்காது, அவைகளுக்கு கண்கள் இருந்தாலும் அவைகளால் பார்க்க முடியாது, அவைகளுக்கு வாய் இருந்தும் அவைகளால் பேச முடியாது, அவைகளுக்கு கைகள் இருந்தாலும் அவைகளால் தூக்கவும் முடியாது, அவைகளுக்கு கால்கள் இருந்தாலும் அவைகளால் நடக்கவும் முடியாது, அவைகள் மனிதனுடைய கட்பனைகளினால் செதுக்கப்பட்ட மனிதனுடைய கை வேலைகளாக இருக்கின்றன.
ஆனால், தாவீது இங்கே கர்த்தரைக் குறித்துச் சொல்லும் போது அவர் சொல்லுகிறார், “கர்த்தர் ஜீவனுள்ளவர்“ என்று.
ஆம் பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து “ஜீவனுள்ளவர்“ அவர் நித்தியகாலமாய் ஜீவிக்கிறார், அவருக்கு ஆரம்பம் இல்லை, அவர் தம்மை நம்புகிற பிள்ளைகளை அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து பாதுகாத்து இரட்சிக்கிறார். அதனால் தான் தாவீது கர்த்தர் தன்னுடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுத்து அவரை எதிரிகளிடமிருந்து இரட்சித்தபடியால் “கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக“ என்று பாடி கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்தார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, தாவீதை போல், நாங்களும் எங்களை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவித்து இரட்சிக்கும் நம்முடைய ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்துவை “ கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக” என்று நம்முடைய ஆண்டவருடைய நாமத்தை துதித்து, ஸ்தோத்தரித்து நம்முடைய வாழ்க்கையில் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம். அல்லேலூயா !
கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment